Arunachaleshwarar
யானே சிவனானேன்

சிவ குரு (இறைவனை குருவாக பாவித்து)


அருணாச்சல வடிவில் வந்த
கருணையின் குருவே
கண்களால் கண்டு உணரும்
காதலின் வடிவே
தெளிவுற்ற நிலையில்
தீன்சுவை அமிர்தே
என்னை திழைத்த
நல் உணர்வின்
தீண்டிட்ட சிவமே.

1. ஐம் பூதப் பெருமான்
என்னை ஆள
ஐம் பொறி ஆண்ட அஞ்சுகன்
வஞ்சகம் இல்லாது என்னில் வந்தான்
ஆருயிர் அரசனும் என்னுள்ளே
என்று உணர்ந்த நான்
யானே சிவனானேன்.

2. பாமரத்து பரவெளியான
பல சுவை படைத்தவன்
ஒரு சுவையானான்
ஊண் உணர்ந்து உணர்வில்
சுவை அறிந்து நின்றேன்
ஐம்பொறி மனதில் அடைபட்டவன்
எனதானானே!
உயிர் நிரம்பி ஊன் உடலினுள் உயிர் சுவை
ஆன்மா என்று அறிந்து அவனானதால்
யானே சிவனானேன்!

3. தேடுங்காலம் வந்ததுவே
தேடியவன் அறியாவண்ணனே
அறிவோம் என்று உணர்ந்து

அகலாது நின்றேன்.
அகம் என்னும் குடுவைதனில்
கலைமகள் குண்டலினியுடன்
குலவியதனால் குதூகலித்து நின்றான்
குன்றாது நின்ற எம்பெருமான்
என் மனக் கள்வன்
அவனில் சிவன் - அவன்
அவனும் நானும் ஒருங்கிணைய
ஒரு மித்தமனம் அதுவாக
யானே அவன் ஆனேன்
யானே சிவனானேன்.

4. மாயா உலகத்து மாயன்
மறைந்து நின்றான் மனம்தனில்
மாறி நின்ற மாதேவியின்
மன லயத்தில் வசப்பட்டு
வந்தானே என்னுள்
அவன் வேண்டி விடைபெற
விழிநீர் பெருகி
விதியை நினைத்து மருகி நிற்க
வா என்று அழைத்து
என்னுள் நின்றான்.
யானே சிவன் ஆனேன்.

5. மனம் தன்னைத் தேடும் மா மலையான்
மாயை தந்து தேடவிட்டான்
மஹாமாயையாய் நின்ற பேருடையான்எ பொற்பாதம் பற்றி நின்றேன் - விழி நீர் வழிய
மஹேசனாய் நின்ற பனிமலையான்
மங்கையோடு வந்து என்னைச் சேர்ந்தான்
சோர்வே இல்லா சுகம் தன்னில்
சுகமாய் மலர.
யானே சிவனானேன்!

6. திரும்பிய திசை எல்லாம்
சுந்தரமானவன் சுவை தந்தான்
அன்பு என்னும் உணவாக
திகட்டா அன்பு சிவமே அது திகட்டாதே
திங்களைச் சூடிய திருக்கரத்தான்
தேடி வந்து என்னை அரவணைத்தான்
யானே சிவனே என்று இருக்க
யானே சிவனானேன்!

7. சுட்டு எரிக்கும் சூரியனை படைத்தவனே
சுட்டு எரிக்க கர்மமாய் வந்த வினையை
சுட்டு எரிக்க சூடும் இடத்தில் நின்றேன்
சுடர் விடும் என்னில் ஆதவன்
சுடர் விட்டான் சூரிய கலையில் நின்று
சுடர் விடும் உயிர் ஜோதி
சுடர் விட்டது என்னுள்(என்னுள் சுடர் விட)
யானே சிவனானேன்!

8. புவனத்தை உய்வித்தவனை
புகழ்மாலை சூட்டி
பூங்கரத்தைப் பற்றி நின்றேன்
புகுவித்த மலர் வாசம் போல்
புகுந்த அகம் அவன் என்னகத்தே
புகுந்த அகம் அவன் எனதானதால்
யானே சிவனானேன்!

9. சங்கொலிக்கும் நாதம்
சங்கினுள் எழும்
எழுப்புவதும்இஇசைப்பதும்
சங்கு அன்று -இறைவனே!
சங்கு படைப்பின் ரகசியம் அதுவே
சங்கினுள் நின்கருணை
நாதமாய் எழுவது போல்
எழுந்திட்ட நாதனை அறிந்து நின்றேன்
நாதனும் ஆனதால்
யானே சிவனானேன்!

10. காட்டாறும் கலந்தது கடலினிலே
காட்டாற்றை எதிர்த்து நின்றுதான் பயன் ஏது?
காட்டாற்றின் வேகம்
விதி என நினைத்து
மதியோடு கலக்க
விதியோடு ஓடிக் கலந்தேன்
கலந்ததினால் கடல் என்றுரைத்தனர்.
யானோ கடல் ஆனதால்
யானே சிவனானேன்!

11. மாமரத்திற்கு கனி சொந்தமன்று
மாங்கனிக்கு மரம் சொந்தமன்று
இரண்டும் காய்த்துஇ ருசித்தால் தான் மகிழ்ச்சியைத் தரும்
மானிடரில் வாழ்வதும்இ வீழ்வதும் உண்டு
மாங்கனியின் ருசி படைத்ததும் -அவன்
மாங்கனியின் ருசியும் அவனே
மாங்கனியின் ருசி ஆனதால்
யானே சிவனானேன்!

12. எல்லா கல்லும் கல் அன்று
கல் ஒளி வீசீனால் தானே கல்லுக்கு அழகு
கல் அழகினும்இ கல் சூடியவன் அழகு
கல்லாகினும்இ கல் சூடியவனாகினும்
கல் ஒளிர்ந்தாலே அழகு
ஒளிர்ந்தவன் என்னுள் ஒளிர்ந்ததனால்
யானே சிவனானேன்!

13. மலர் தோட்டத்தில் மலர் மலர்ந்தால் வாசமே
மலரின் வாசனையை
கவர்ந்து செல்லும் காற்று
காற்றோடு செல்லும் மலர் வாசம் போல்
கலந்து செல்லும் சிவமே
காற்றோடு கலந்த மலர்வாசம் போல் என்னுள் கலக்க
யானே சிவனானேன்!

14. எல்லா அழகிலும்
அழகானது மனமே
மனம் மலர்ந்து மணந்தால் சிவமே
மன அழகிருந்தாலும்
மன அருள் கலந்ததால் சிவமாகும்
மணமும் மலரும் சிவமாக
மலர்ந்த மலரில் மணந்தேன்
யானே சிவனானேன்!

15. கல்லினுள் உயிர் வாழும் தேரைக்கும்
தேடாது இரை வழங்கும் இறையே!
நீயே தேடிக் கொடுக்கும் இரையும் உன் இறை அருளையும்
உள் ஒளிந்து கண்டேன்
என்னுள் நீ இருந்ததனால்
யானே சிவனானேன்!

16. ஆகாயத் தாமரை கண்டேன்
ஆகாயமாய் நீ இருந்தாய்
தாமரையாய் தன் அகத்தில் விளைந்து
தலைமீது விரிந்ததுவே
சகஸ்சரம் என்னும் தாமரையாய் இது உனதானதே
உன்னோடு கலக்க வந்ததனால்
விரிந்து கண்டேன் ஆகாயமாய்
ஆயிர இதழ் தாமரையும் யானாக
ஆ என்ற காயத்தில் கலந்தது யானே அதுவாக
யானே சிவனானேன்!

17. அனைத்தையும் அடக்கி உண்ணும்
அக்கினியும் அடக்கி நின்றாயே நலம்
அகங்காரம் அறிவோடு சேர்ந்தால் பலன் ஏது?
அடங்காதவனும்இ அடக்கி ஆள்பவனும்
நெருப்பு என்னும் உயிராக
உயிரும் ஒடுங்கும் ஒரு நாள் நெருப்பில் அடங்கும்.
வெந்தணல் காயமோ சிவம்
காயமும் கலந்தது நெருப்பாக
கலந்து உயிரே சிவமாக
யானே சிவனானேன்!

18. எல்லாம் அவன் செயல்
என்று அறிந்தேன்
எல்லாம் செய்தான்
எனக்காக என்று அறிந்தேன்
எல்லாம் அறிந்தவன்
எனக்காகவே என்று தெரிந்ததுஇ தெளிவுற்றேன்!
என்னுள் இருந்து
என்னையே இயக்கியது
அவன் என்று அறிந்தேன்இ உணர்ந்தேன்!
அவனோடு இருந்ததால்
யானே சிவனானேன்!

19. பிறப்பில்லா பெருமானே
பிறக்க வைத்தாயே பிறவிதந்து
பிழையில்லா பெருமானே
பிறவிப்பயன் அடைந்தேன் உன்னை உணர்ந்து
பிறை சூடிய பெருமானே
பிறப்பில்லாது செய்வாயே
பிடிப்பு இல்லாத அந்தரனை பிடித்து
பிடிப்பு இல்லாது இருந்தேன்
பிடித்தான் என்னை அவன்
யானே சிவனானேன்!

20. இவ்வுலகிற்கு ஏன் வந்தாய்?
எதற்காக வந்தாய்?
என்ன செய்;கிறாய்?
என்ன செய்ய போகிறாய்?
இறுதியில் எங்கே போவாய்?
அவ்வுலகிற்கு எப்படி போவாய்?
விடையேறி அருளுபவனிடம்
விடை அறிய பொற்பாதம் பற்றி
மன்றாடினேன் பல காலம்
விடையானே விடையானான் என்னுள்
யானே சிவனானேன்!

21. அறியாதான்இ தெரியாதான் என்றார்கள்
அறியாதவனை அறிவது எங்கனம்
அறியாதவனை அறியவே தந்தது
அறிவு என்றுணர்ந்தேன்
அறியும் பொருள்
யான் என்று அறிந்தேன்
அறிய செய்யும் பொருள்
சிவம் என்றுணர்ந்தேன். அறிந்ததினால்
யானே சிவனானேன்!

22. இறைவா அவரவர் கற்பனைக்கு
ஏற்ற கடவுள் நீ
கற்பனைக்கு கடவுள் அல்ல
கடவுளும் கற்பனை அல்ல
கற்பனைக்கு எட்டாத
அற்புதம் நீ என்றால்
யான் கற்பனை செய்வது எங்கனம்?
கற்பனை செய்தேன்
யானே நீயாக
யானே சிவனானேன்!

23. எல்லாம் படைத்தாய் எனக்காக
எல்லாம் படைத்தவனே
என்னில் ஏன் ஒளிந்தாய்.
உன்னை யான் தேடவா!
வெளியில் காணாத பொருள்
ஒன்றை கண்டேன் என்னுள்ளே
கண்டத்தில் நின்றேன் ஒன்றாக
யானே சிவனானேன்!

24. எல்லை இல்லாதவன்
கடவுள் என்றார்கள்
எல்லாமே கடவுள் என்றார்கள்
எல்லாம் கடந்து நிற்பவன்
கடவுள் என்றார்கள்
எல்லாம் கடந்து உள் இருப்பவன் கடவுள் என்றார்கள்
எல்லாம் களைந்து
என்னுள் கிடந்தேன்
யானே சிவனானேன்!

25. யாரும் அறியாது
உலகை இயங்க விட்டாய்
பசியை தந்து
உழைக்க விட்டாய்
பிணியை தந்து
உன்னை நினைக்கவிட்டாய்
மரணத்தை தந்து உன்னை தேடவிட்டாய் -எதற்கு?
மீண்டும் பிறக்காமல் இருக்க

தேடவிட்டவனும் தேடுபவனும் நின்று
என்னுள்ளே என்று அறிந்து உன்னுள்
யானே சிவனானேன்!

26. எல்லோரும் தேடிக் கொண்டே இருந்தார்கள்
பொன்இ பொருள்இ போகம் என்று
வந்த வினை மறந்து
பந்தமும்இ பணமும்
உதவாத பயணம்
உடலும் தான் கூட வராத பயணம்
யாது ஒன்றும் வேண்டாத பயணம்
அவனையே வேண்டும் -என்று வேண்டியதால் கிடைத்தான் இணைந்தேன்.
யானே சிவனானேன்!

27. உலகத்தைப் படைத்தவனே
என்னைப் படைத்தான்
உலகத்தை காப்பவனே
என்னையும் காத்தான்
உலகத்தில் கலந்து இருப்பவன்
என்னிடமும் கலந்தே இருந்தான்
கலந்தே இருந்ததால்
யானே சிவனானேன்!

28. காண்பதற்கரியான் என்பர்
காண தேடினேன் வெளிதன்னில்
காணவில்லை கடவுளை தேடியே
களைத்து அமர்ந்தேன்.
அவன் இருதயவாசி என்றனர்
இருதய ஓசை கேட்டது
கேட்டேன் இருதய ஓசையை
கேட்டு கொண்டிருந்த போதே ஓசையில்லைஇ யானும் இல்லை
ஓசையோடு கலந்ததனால் நாதம் ஆனேன்.
நாதமும் நாதன் ஆனதால்
யானே சிவனானேன்!

29. எதுவெல்லாம் நம் சொந்தமோ
அதுவெல்லாம் இவ்வுலக சொந்தம்
எதுவெல்லாம் இவ்வுலக சொந்தமோ
அது நம்மோடு வராது.
எது நம்மோடு வருமோ அதுவும்
அவ்வுலகத்திற்கு செல்லாது.
நம்மோடு வருவது எல்லாம் நம்மை
இவ்வுலகத்திற்கு கொண்டு வரும்.
எதுவும் சொந்தம் இல்லாது சென்றால்
சொந்தம் ஆக்குவான் அவன் நம்மை
சொந்தமே இல்லாது இருந்தேன்
அவனே சொந்தமானான் எனக்கு.
யானே சிவனானேன்!v
30. இன்று நீ
நாளை நான் என்று அ
றியாது
மரணத்தில் அழுது நின்றான்.
அறியாதது யார் குற்றம்.
அறிந்தால் தெரிந்து கொள்வார்
மரணத்தின் உண்மை.
தெரிந்தாலே தெரியும்
நம் வாழ்க்கையே பொய் என்று அறிந்தான்.
மெய் எது என்று தேடினேன்
மெய்யே உண்மைஎ மெய்க்கு அழிவு இல்லை என்றால்
பொய்யானது மரணம் என்று அறிந்தேன் மெய்யானேன்
பொய்யான உடலில் மெய்யானேன்.
யானே சிவனானேன்!

31. மாறிவரும் உலகில்
மாறாத இறைவன்
நீ மாறினாலும் இறைவன் மாறுவது இல்லை
மாறாத இறைவனை
மறவாது இரு
இறைவனை மறவாது இருந்தால்
மாறுமே மனம் சிவமாக
மாறிய மனம் யானாக
யானே சிவனானேன்!

32. எதுவும் எனக்கு
சொந்தமானதாக இல்லை
இப்போக வாழ்கையில் உள் எண்ணம்
என் சொந்தமானதாக இருந்தது
இந்த எண்ணம் இறைவனுக்காக
என்று வைத்தேன்
என்னிலும்இ எண்ணத்திலும் இறைவன் இருந்தான்
இவ்விரண்டும் இறைவன் ஆனதால்
இறைவனே யானானேன்
யானே சிவனானேன்!

33. போகும் அவ்வுலகு அரூபதாரியை
யாரும் அறிந்தார் இல்லை
இவ்வுலகத்து பெருமான்
சர்வ தேக தாரியை அறிந்தேன்
இருவரையும் ஒருவர் என்றே
அறிந்தேன் ஒன்றோடு ஒன்றி
ஒன்று என்று ஆனதால்
யானே சிவனானேன்!

34. பெறுதற்கரிய பெருமான்
உயிரால் உயிர்வளர்த்தான் என்று அறிவோம்
விதை விதையாக காண்பர் சிலர்
விதையில் விருட்சம் காண்பர் சிலர்
விதையில் உயிரை காண்பர் சிலர்
உயிரால் உயிர் வளர்வதைக் கண்டு
யானே உணர்ந்தேன் யான்
அவனுள் என்னை வளர்த்ததால் யானே சிவனானேன்!

35. மாயை விலக்கும் மாயனே நீ
மாயமாய் மறைந்து இருப்பது என்ன?
மண்ணில் விதியென்னும் வினைபடைத்து
மதியை நீ கொடுத்தது என்ன?
மங்கையைப் படைத்து அதில் காமத்தை விதைத்து.
நீ கலவாது இருப்பது என்ன?
மாளாது ஆசை படைத்து
பொன்இ பொருள்இ போகம் வைத்து
தேடவே விட்டது என்ன?
மாண்டபின் பிறவாது இருக்க
கர்மமே வினை என்று உயர்ந்து
மீளாது உழல்வது தான் என்ன?- யான்.
மாள்வது இல்லை உன்னை
மறப்பது இல்லை என்றுணர்ந்ததால்
நீயாகவே மாறினேன்
யானே சிவனானேன்!

36. அனாதை என்று தான்
யாரும் இல்லையே
அவன் இருக்கிறான்
என்றே எல்லாம் இருக்கின்றார்.
இறைவனை அறியாதவர்க்கு
அவன் அறியாத வண்ணமே
ஆருயிர்க்கும் உதவும் கரம் இறைக்கரமே
இறைவனை அறியாதது யார் குற்றம்?
அறிந்து உணர்ந்தேன்
உலகுக்கே உதவும் கரம் யார் என்று
அறிந்து அதுவானதால்
யானே சிவனானேன்!

37. இறைவன் இல்லை என்பார்
இறைவன் இல்லை என்பவர்க்கு இல்லாதவன்
இறைவன் இல்லை என்ற சொல்லில்
இல்லாதவனாகவே இருப்பான்
இல்லை என்ற சொல்லும் அவனே
அந்த இல்லை பொருள் ஒன்று உண்டு அது காணாத பொருள்.

அந்தக் காரணகாரிய பொருளைக்
கண்டு உண்டுஇ உணர்ந்தேன்
யானே சிவனானேன்!

38. ஐம்பூதம் இறைவன் என்பர்.
ப்ராணனே இறைவன் என்பர்.
ஓசையே இறைவன் என்பர்.
ஜீவனே இறைவன் என்பர்.
ஆகாயமே இறைவன் என்பர்.
அதுவல்ல இறைவன்
ஐம்பூதத்தில் கலந்தவன்
ப்ராணனில் கலந்தவன்
ஓசையில் கலந்தவன்.
ஜீவனில் கலந்தவன்
ஆகாயத்தில் கலந்தவன்
இவை எல்லாம் படைத்து
காத்து அருள் புரிந்துஇஅழித்துஇ மறைந்து
நீக்கமற நின்றுஇ உணர்ந்து இயக்கி அனைத்தும்
அறிபவன் இறைவன்
அவன் அறிந்து நின்றதால்எ யானே சிவனானேன்!

39. உலகப் பொருள் ஒன்று அறிந்தேன்
உட்பொருள் ஒன்று உணர்ந்தேன்.
உயிர் பொருள் ஆற்றும் வேலையே
கர்ம வினைத் தொடர்
கரும வினை தொடராத
உட்பொருள் ஒன்றோடு கலந்தேன்
உலகத்து உள் இருப்பு அதுவானதால்
யானே சிவனானேன்!

40. உலகத்தில் எதுவெல்லாம் போகுமோ
அது வெல்லாம் நித்தியமும் அல்ல
உயிரும் ஒரு நாள் போகும்.
போகாத பொருள் ஒன்று
ஆண்டு அருளுவதை அறிந்தேன்.
நித்திய சத்தியம் அதுவென்று அறிந்து
நித்தியத்துடன் நித்தமும் இருந்தேன்.
நித்தியமும் யான் இருந்ததால்
யானே சிவனானேன்!

41. ஆருயிர் அரசன் என்னுள்ளே
என்றார்கள் அனைத்துமானேன்.
ஆண்டவனை மட்டும் தேடினேன்.
அனைத்தும் என்றதும் விலகியது என்னில்
விழி திறக்கும் முன்னே
மனம் நின்ற போது
மனம் நின்ற இடத்தில் கண்டேன் கலந்தேன்.
நானும் அவனும் ஒன்றாக
யானே சிவனானேன்!

42. உலகளாவியவன் உலாவிக் கொண்டிருந்தான் என்னில்
உழன்று கொண்டிருந்தேன்.
உலகத்தை உருட்டுவது யார் என்று அறியாது
தன்னால் ஓடுபவனுடன் ஓடிக்கண்டே நின்றேன்!
உச்சி வெளியும் வெட்ட வெளியானது
உலகளாவியவன் என்னள்ளே வந்தான்
யானே சிவனானேன்!

43. கானகத்து பறவைக்கு
கடவுள் யார்?
அதனைப் படைத்தவனா?
உணவு கொடுத்தவனா?
எதனையும் அறியாது
இறை தேடிய பறவைக்கு
உயிர் கொடுத்தவன்
இறைவன் என்றால்
எதனையும் கொல்லாது இரு
நீயே இறைவனாக இரு!

44. காதலித்து கண்டேன்
கலவியக் கள்வன்
காயத்தில் கலந்து இருந்தான்.
காதலித்தேன் என்னை
கடல் நீருக்கு உப்பு இட்டவன்
கண்ணீரிலும் இருந்தான்
கண் மூடியே கலந்தேன்
அருணை வாழ் அருணையன்
என்னுள் கலந்ததனால்
யானே சிவனானேன்!

45. எண்ணில்லாதவன் என்னில்
இருக்க எண்ணி எண்ணத்தையே சிறைபிடித்தேன்.
எண்ணமும் நின்றது அவன் பால்
எண்ணம் அவன் ஆனதால்
மனம் மணந்தது
மனம் மணந்ததால்
எதுவும் நாற்றமில்லை
எதுவும் நாட்டம் இல்லை
மனம் மணந்ததால்
யானே சிவனானேன்!

46. உலகக் குயவனும் கயவனாக
பிடித்து இதயச் சிறையில் இட்டேன்
இனியவன் எண்ணத்தால் ஓட நினைத்தான் விடுவேனோ!
கயவனே குயவன் - அவன் என்னைப்படைத்ததால்
படைத்தவனையே என்னை பாதுகாக்க
அவனில் சரண் புகுந்தேன்
யானே சிவனானேன்!

47. ஒன்று பிறந்தால்
ஒன்று மடியும்
உலக கணக்கில்
ஒடுங்கியவன் கணக்கு
ஒடுங்கியவன் என்னுள் இருந்ததால்
யானே சிவனானேன்!

48. கற்பனையில் உருவானவன்
ஓவியத்தால் வடிவானவன்
கோயில் சிலையானவன்
வர்ணிப்பில் துதியானவன்
ஏட்டில் பாடல் ஆனான்
படித்ததனால் மனதில் பதிவானான்
பண்பாளன் ஆனதால் உணர்வானான்
உணர்வானதால் உயிரானான்.
உயிருக்கு உயிராய் அவன் வந்ததால்
யானே சிவனானேன்!

49. பந்தமே இல்லாத சொந்தம்
சொந்தமானது உடல் தந்து
உடலும் உயிர் போல் உறவாடி நின்றது
உடலில் நம்மை நாம் அறியாது.
பேர் ஆனந்த ஆண்டவன் அவன்
என்னில் நான் எதுவென்று அறிந்தேன்
நான் பிரிந்து நின்றேன்
யானே சிவனானேன்!

50. ஞானத்துடன் உள்ள யோகம்
மதம்இ இனம்இ மொழி கடந்து
ஞானமும் அவன் ஆனதால்
பேதமும் இல்லா போதனை ஆனது.
போதனையும் அவன் ஆனதால்
இறைதர்மம் பிறந்தது
இறை தர்மம் பிறந்ததால்
சாந்தி பிறந்தது
சாந்தி பிறந்ததால்
அன்பு மலர்ந்தது
அன்பே சிவம் ஆனதால்
ஆத்மாவாய் உலகைக் கண்டது
ஆத்மாவாய் ஆனதால்
யானே சிவனானேன்!

51. வெளியில் தேடுபவன்
வெளியிலேயே திரிவான்.
உள்ளே தேடுபவன்
உள்ளேயே தேடுவான்
வெளியில் தேடுபவனையும்
உள்ளே தேடுபவனையும்
தன்னை உணர்த்துபவன் தான் என உணர்த்த முடியும்.
இதுவும் அவன் செயலே
இதுவும் அவனே செய்ய வேண்டும்
அதையும் அவனே செய்ததால்
யானே சிவனானேன்!

52. மௌனம் என்ற போர்வையை
போர்த்திக் கொண்டேன்
வெளித் தொல்லை முடிந்தது
எனக்குள் இருக்க நினைத்தேன்
உள்ளேயும் ஓடவிட்டான்
ஓடி களைத்து அழுதேன்
என்னைக் காப்பாற்று இறைவா என்று
அவன் பாதம் பற்றியே நின்றேன்.
அவன் பதம் ஆக்கினான்.
அவன் என் பதம் ஆனதால்
யானே சிவனானேன்!

53. எல்லாம் இருந்தாலும்
எல்லாம் இல்லாததாக இருந்தேன்
எல்லாம் ஆனவன் என்னோடு இருந்ததால்
அவனாகிப் போனேன்
அவனாகிப் போனதால்
யானே சிவனானேன்!

54. பிறரால் சிறைப்பிடிக்கப்பட்டேன் தாய் என்று
என்னுள் என்னை சிறை வைத்தேன் சிவம் என்று
உறவுகள் மாறியதால் - தாய்
உறவு மாறாததால் - சிவம்
மாறாதுஇ மறவாது அவனோடு இருந்ததால்
யானே சிவனானேன்!

55. மதம் பிடித்ததால் மனிதன் என்றார்கள்
ஆசை பிடித்ததால் பேய் என்றார்கள்
தொல்லை கொடுத்ததால் பிசாசு என்றார்கள்
புதையல் கொடுத்ததால் பூதம் என்றார்கள்
தர்மம் செய்ததால் தர்மவான் என்றார்கள்
குணமே குணம் ஆனதால் குணவதி என்றார்கள்
குணமே குறையே இல்லாத இருதய குகையில் இருந்ததால்
கடவுள் என்றார்கள்.
அவரவர் செய்கின்ற வினையே செய் வினையானது
குறையே இல்லாதவன் இறைவன்
குறையே இல்லாதவன் என்னுள் இருந்ததால்
யானே சிவனானேன்!

56. தேவ ரகசியம் என்றார்கள்
அது என் தேக ரகசியம் ஆனது
படைத்தவனுக்கு காக்கவும் தெரியும்
நாம் அவன் படைத்தவற்றை காக்க வரவில்லை
நாம் நம்மை காக்கவே வந்தோம்
கர்மத்தை தேகத்தில் இருந்து
கழித்தலே தேக ரகசியம்.
பொது சேவை செய்து மேல் உலகில்
உயர் பதவியை அடைவது நாம் அறியாத தேவரகசியம்.
நாமே நம்முள் இருந்து கர்மம் அற்று
இறையை சிந்திப்பதே தேக ரகசியம்.
சிந்தித்து சிந்தித்து நான் அவன் ஆனதால்
யானே சிவனானேன்!

57. விளக்கேற்றிவைத்தான் உலக விடியலுக்கு
சுழற்றி விட்டான் உலகை
ஆதவன் உதிப்பதற்கு
இரவு பகல் பிறக்கவைத்தான்
மனித பகல் பிறக்கவைத்தான்
மனித ஓய்வுக்கு
பசியை வைத்தான் உலகமே உழைப்பதற்கு
அறிவை வைத்தான் விஞ்ஞானம் பிறப்பதற்கு
ஜனனம் வைத்தான் இறைவனை அறிவதற்கு
மரணம் வைத்தான் உலகம் தாங்குவதற்கு
விதியை வைத்தான் மனிதனை அடக்குவதற்கு.
ஞானம் வைத்தான் மீண்டும் மனிதன் பிறக்காமல் இருப்பதற்கு
சித்தத்தை தந்தான் இறைவனுடன் கலப்பதற்கு
சித்தமானேன் இறைவன் என்னில் வந்தான்
யானே சிவனானேன்!

58. மனிதன் வேறுஇ தெய்வம் வேறு அல்ல
தெய்வப்படிமானங்களே மனிதன்
மனித குணம் மாறும் போது
தெய்வீகம்இ பிறக்கிறது
ஜீவ ஓம் சிவ ஓம்
சேரும் போது மனிதன் தெய்வமாகிறான்
மனித உருவமும் தெய்வ குணமும் தான் தெய்வம்.
நீ தெய்வமாக மாறு தெய்வத்தை தேட வேண்டியது இல்லை
நீயே தெயவம்.
என்னுள் தெய்வம் வந்தால்
யானே சிவனானேன்!

59. உலகையும் விண்ணையும் படைத்தவன்
என்னையும் படைத்தான்
மண்ணில் படைத்தான் எதற்காக? தனக்காக
என்னையும் என்னில்
அறிவதற்கு என்று
அறிவையும் படைத்தான் தனக்காக
தன்னை தானே அறிந்த பின்னே
என்னுள்ளே இருந்தேன்
நான் என்று நானாக
யானே சிவனானேன்!

60. மதமும் மொழியும் கடந்து நின்றான்
இனமே அற்று உள் இருந்தான்
பாசக் கடலைக் கடந்து நின்றான்
அன்பென்னும் பொருளில் உள் இருந்தான்
அன்பாய் மாறிப் பிடித்தேன்.
சிவனாய் மாறிப் போனேனே.
அன்பாய் மாறிப் போனதினால்
யானே சிவனானேன்!

61. மண்ணில் விளைந்தது எல்லாம்
விண்ணுக்கு கொண்டு செல்ல முடியாதே
மண்ணில் விளைந்த மனிதன் ஆனாலும்
விண்ணில் வாழ முடியாதே
மண்ணில் விளையா பொருள் ஒன்று
மனதில் விளைந்து போனானே!
மீண்டும் பிறவா நிலை வருமே
நிலையில்லா பொருளால்
அருளை வாங்க முடியாதே!
விண்ணில் விதைக்கும் சொல்லதுவே
சிவமாய் நின்று ஒளி தருமே
ஒளியாய் போன மனதினால்
ஜீவமுக்தன் ஆனேனே
ஜீவமுக்தன் ஆனதினால்
யானே சிவனானேன்!

62. காலம் கற்று தராத பாடம்
கடைதனிலே கிடையாது
காலம் காட்டும் வான் கருவியும்
கடைதனிலே கிடையாது.
நித்தியமான வாழ்வுக்கு உலகப் பொருட்கள் உதவாது
மெய் பொருளை அறிய நித்தம்
என்னுள்ளே இருந்தேன்
பொய் உறக்கம் தவிர்த்து நின்றேன்
மெய் விழிக்க மெய்யே எல்லாமாக கண்டேன்
மெய்யே மெய்யை அறிந்ததினால்
யானே சிவனானேன்!

63. இறைவா என
அழைத்தபோது எல்லாம் வருவாயோ!
ஆதவன் போல் என்னில் உதிப்பாயோ!
என் உறவுகள் எல்லாம் நீயாக
உன் உள்ளம் மட்டும் எனதாக
எதுவும் இல்லா உலகினிலே
நீயும் நானும் ஒன்றாக
எல்லா மனமும் நீயாக
நின்ற மனம் கண்டதே
ஒன்றோடு ஒன்றி கொண்டதே
ஒன்றோடு ஒன்றியதனால்
யானே சிவனானேன்!

64. கோடிஇ கோடி கோள்கள் படைத்தாய்
அதில் கொஞ்சம் மட்டும் தெரிய வைத்தாய்
ஆதவனை நடுவில் படைத்து வைத்தாய்
மற்றவை எல்லாம் சுற்ற விட்டாய்
சுற்றும் உலகில் என்னைப் படைத்தாய்
சுதந்தரமாய் என்னில் ஒளிந்து கொண்டாய்
சித்தம் எல்லாம் சிவமாக்கிட
சிறை வைத்தேன் உன்னை எனதாக்கி
சிவமே என்னுள் ஒளியானதால்
யானே சிவனானேன்!

65. பல்லுயிர்க்கும் வகை வகையாக முகம் படைத்தாய்
முகத்துக்கு ஏற்ற குணம் படைத்தாய்
மனதை மட்டும் ஒளித்து வைத்தாய்
மனிதனுக்கு மட்டும் உன் உருவம் தந்தாய்
தன்னை அறிய அறிவு தந்தாய்
அறிய தெரிந்தது எல்லாம் சிவமாக
அறிவோம் என்றதுஇ எல்லாம் நலமாக
அறிந்து கலந்தேன் அதுவாக
அதுவே ஆகிப் போனதால்
யானே சிவனானேன்!
66. உயிருக்குள் உயிர்வளர்த்தான்
உயிரில் உறைந்து நின்றான்
உணவில் இருந்து உயிராய் வந்தான்
சக்தி என்னும் சத்தாக
சத்தானது எல்லாம் சித்தாக
சித்தமானது எல்லாம் சிவமாக
சிறைவைத்தேன் அவன் உயிராக
உயிராய் இருந்தவன் சிவமே
உயிரும் சிவமானதால்
யானே சிவனானேன்!

67. அகரமான ஆண்டவன்
சிகரமானான் சிவன்
ஆண்டது எல்லாம் சிவமே
ஜீவன் ஆனது எல்லாம் சிவமானது
சிவமானது எல்லாம் ஜீவன்
இரண்டும் நடுவில் ஒன்றானது
அனாதகப் பொருளாய் ஆனது
பொருளானது அருளானது
அருளானது அருபமானது
அருவத்தில் கலந்ததினால்
யானே சிவனானேன்!

68. உள்ளக் கள்வன் ஒன்று உண்டு
ஓடித் திரிந்து மறைவது உண்டு
நின்று பிடிக்க வருவதுண்டு
கருமம் துளைக்க கூடுவதுண்டு
மெய்யான பொருள் கொண்ட
பகலாய் ஆதவன் உள்ளே உதிப்பதுண்டு
சிவமாய் கண்ட மனதுண்டு.
மனம் விண்டயான் சிவமானதால்
யானே சிவனானேன்!

69. ஆயர் கலையின் அரசியுமாம்
குண்டலினியின் சிரம் கண்டு
நாதன் ஆகிய பெயர் கொண்டு
நகரமான உச்சியில் நண்டு உருட்டும்
கலைக் கண்டு உள் நின்ற இடம் சிவமே!
சிவமே காயம் ஆனதால்
யானே சிவனானேன்!

70. தலை வாசல் ஒன்று உண்டு
ஆறு நிலை கடந்து நின்று
சோமா என்று கூவிடவே
உள்ளே பவன் வந்தான்
பானம் கொண்டு ஆலிங்கமும் அமுது ஊற்றிற்று
அதே கதி என்றாலே
அமுது உண்டு என்றிற்று
சிவா என்று உடலில் வாங்கி நிரப்பி வைத்தேன்.
யானே சிவனானேன்!

71. அம்பலத்தான் ஆடக்கண்டேன்
அகக்கண் விழிக்க நாதன்
ஆடிய ஆட்டத்தில் நாடி அதிர்ந்து போனேன்.
அதிர்ந்தது எல்லாம் சிவ சிவமாக
சிவமான எல்லாம் என்னில் உணர்வாக
உணர்வானது மெய்யாக
மெய்யானது எனக்கு இறையாக
இறை என்னில் இறைவனாக
யானே சிவனானேன்!

72. ஊன் குகைக்குள்
ஒளிந்து கண்டேன்
ஓர் ஆயிரம் ரகசியம்
ரகசியத்தைப் படைத்தவன்
ரகசியமாக இருந்தானே
ரகசியத்தில் ரகசியம்
அவனாகவே வந்து என்னுள் இருந்தான்.
ரகசியமே யான் ஆகிப் போனதால்
யானே சிவனானேன்!

73. பாடலுக்கு மயங்கி வந்தவன்
ஆடலில் கலை நாயகன்
ஆயர் கலையை அறிந்தவன்
வலமாய் காலைத் துhக்கியே
இடமாய் நிற்கக் கண்டேனே
வலமாய் யாழை மீட்டியே
இடமாய் வந்தான்.
யாழின் பண்ணோடு பதியும் பதிந்தான்
ஜீவன் ஆதியும் ஆனதால்
யானே சிவனானேன்!

74. பழங்கலையை பதிய வைக்க
வாசி வாசி வாசி என்று
வாசியான் வாசியில் வசிக்கவே
வாசியால் ஏற்றி
நாசியில் இறக்கி
மசியவைக்க நிறுத்தி
சிவமே காயம் ஆக
யமனையே வென்றேனே
யமனையே வென்று
சிவமது நின்றதனால்
யானே சிவனானேன்!

75. நாடி நின்றேன் நடராஜனை
நாதம் நாசியில் இசைக்கவே
வலது காலை தூக்கினான்
வடகலை இயக்கினேன்
இடது காலை ஊன்றி நின்றான்
பிங்கலை இயக்கி நிறுத்தினேன்
பிடிப்படாதவன் பிடிபட்டான்
சூட்சுமம் என்னும் சுழிமுனையில்
பந்தனம் செய்தேன்
பரசிவம் ஆனேன்
பரசிவம் ஆனதால்
யானே சிவனானேன்!

76. சிவரூபம் கண்டேன்
மனதில் மன்னித்தேன் அவனை
வா நீஇ வா நீ என்று வந்தான்
சிவ வாசியாக வாசியான்
சிவானியாக சிவனே என்று இருந்தேன்
சிவனாகி போனேன்
யானே சிவனானேன்!

77. ஓசையிட்டு அழைக்க
ஒளிந்து கொண்டிருப்பவன் வருவான் ஆசையாய்
ஓசையின்றி அசையாது ஓங்கிக்
குவித்து உள் நின்றேன்.
என்னோடு எழுந்தே நின்றான் சத்தமாக
உயிர்சக்தியோடு கூட்டினேன்
சகஸ்ரத்தில் எழுந்து என்னில் மலர்ந்தான் சிவமாக
என்னில் மலர்ந்ததால்
யானே சிவனானேன்!

78. முத்திரையில் முகம் பார்த்தேன்
அகண்டத்தில் செல்லும்
முகவுரை கண்டேன்
முடிவில்லா முன்னவன்
ஆதவனாய் அங்கத்தில்
விழித்திட சந்திரனுடன்
தேய்ந்து வளர்ந்தேன்.
நர்த்தனம் ஆடினான் பொன்ஒளியாக
அம்பலத்தில் கண்டேன் அவனை
அம்பலபடுத்தினான் அவனை
பொன் அம்பலன் என்று எங்கும்
நிறைந்தவன் என்னுள்
வெண் ஒளியானதால்
யானே சிவனானேன்!

79. கர்மம் எரிக்கும் மயானத்தில் மையலிட்டேன்இ என் மகேசனுக்காக
நட்ட நடு நாசியில்
வெட்ட வெளி வீதியான்
சிற்றம்பல வாசன் வந்தான் சிரசின் மேலே
சில்லென்ற பொன்ஒளியாய்
ஊடுருவி நின்றான் என்னில்
இருவரும் இணைந்தோம்.
மன மஞ்சத்தில் மலர்ந்தேன் அவனோடு
கண் மூடி கலந்து உணர்ந்தேன்
அவனும் நானும் ஒன்றானோம்.
அவனுடன் ஒன்றே ஆனதால்
யானே சிவனானேன்!

80. சிதம்பரம் சிதம்பரம்
சித்தத்திலேயே பரம்
ரகசியத்திலும் ரகசியம்
சித்தில் பரமன் இருப்பது
சித்தத்து பரன் சித்திதான்
கர்மம் அறுக்க சிவம்
சிவகாமியானானே!
அது வானதே ரகசியம்
ரக-சி-யம்
யானே அவன் ஆனதால்
யானே சிவனானேன்

81. அறிவோம் அறிவோம் என்று
அறிந்து கொண்டேன்.
ஓம் என்று அறிந்து பொருள்
அவனாகி இருந்தான்
அறிந்தவன் யானானேன்
அறிந்தவனும் அறியப்பட்டவனும் ஒன்றானதால்
ஒலி பிறந்தது
சத்தத்தில் சத்தத்தை கேட்டு கரைந்தேன்.
ஒளிபிறந்தது.
ஒலி ஒளியும் ஆனவன் ஆனதால்
ஓங்காரம் ஆனேன்
ஓங்காரம் யான் ஆனதால்
யானே சிவனானேன்!


82. ஹரியும் சிவனும் ஒன்று என்றனர்
அறிய செய்தான் ஜீவனை
அறிந்தேன் சிவனை
சிவனே என்று இருந்தவன்
ஜீவித்துக் கொண்டிருந்தான்இ
எல்லோரிலும் எல்லாமாய்
ஜீவத்தில் கருப் பொருள்
கர்மத்தில் காமத்திலும்
கலக்காது இருந்தது.
கலவாது இருந்த தனிப்பொருள்
சிவபொருளாக இருந்தது
சிவனை என்னில் ஜீவிதமாக்கிக் கொண்டேன்
அவனாக அவனே யான் ஆனதால்
யானே சிவனானேன்!

83. முக்கண்ணில் மூட்டும் தீ
அகக்கண்ணில் தெரியுமே
அகக்கண் திறந்து நிற்க
அகங்காரம் அழியும்
அகங்காரம் அழித்தாலே
அகத்தில் எரியும்
அகங்காரம் எரித்தாலே
நீ அகத்தியன் ஆவாயே
அகத்தியான் யான் ஆனதால்
யானே சிவனானேன்!

84. அனா+தகம்
ஆராய்ந்தேன் - அகத்தில் எழுந்ததே
அகரத்தில் எழுந்தது எல்லாம்
அகண்டத்தில் இருந்தது.
அகண்டத்தில் இருந்தது எல்லாம்
அன்பாலே விளைந்தது.
அன்பால் விளைவது எல்லாம்
அகத்தில் விதைத்தது
விதைத்தவன் அவனானானே
அவன் என்னில்
விளைந்ததால்
யானே சிவனானேன்!
85. சந்திரனை சூடியவள்
சரிநிகராய் ஆடவந்தாள்
வாசியில் வாசுகியானாள்
வாசனின் சிவவாசியவள்
சிவனையே காட்டிஇ சிவகாமி ஆனாள் என்னில்
சிவகாமியாகியே சிவனிலே
கலந்து இருக்க
யானே சிவனானேன்!


86. ஐந்தெழுத்தில் விளைந்த பொருள்
ஓர் எழுத்தில் மலர்ந்ததே
ஓர் எழுத்தில் அருவமாய் போக
ஓங்கியே ஓய்யாரமாய் ஆனானேன்
ஓங்காரமாய் என்னுள் வந்து
ஒன்றியதால் - யானே சிவனானேன்!


87. கண்டங்கருத்தவனோடு ஆட- காளி ஆனேன்.
கலை பல தெரிந்தும் காலைத் தூக்கத்தான் முடியாது
காலைத் தூக்கி நின்றவனோடு
காலை மாற்றாது நின்றேன்
நான் நானாக இருந்து அவனானேன்
நான் அவனானதால்
யானே சிவனானேன்!

88. மனம் களவு போகாது இருக்க
கண் மூடி காயத்துள் இருந்தேன்
என் அகக்குகை திறந்தது
பேர் இன்பப் பெரு வெள்ளம்
காயத்தில் பரவியது
என்னகத்து ரகசியப் பெருமானின்
ரகசிய வழி அறிந்தேன்
ரகசியமானவனின் உணர்வில்
ரசித்தே கலந்தேன்
உயிரானவன் என்உணர்விலும் கலந்தான்
ரகசியமானவன் என்னோடு
கலந்தே இருந்துவிட்டான்
யான் அசையாது இருக்கும் வரை
அவன் அசையாது இருந்ததால்
யானே சிவனானேன்!

89. என் அன்பார்ந்த சிவம்
அன்பாக இருந்தது என்னில்
அன்பில் அடைபட்டவனை
அறியத்தான் நினைத்தேன்.
அனைத்துயிரும் என் முன் நின்று
யானே சிவன் என்று உரைத்தது.
எல்லாம் அன்பாகி என்னைப் பார்க்க
எல்லாம் சிவனாகிப் போனது
உள்ளும் வெளியும் சிவம் நிற்க
என்னில் நின்ற பொருள் மெய்யே
மெய்யை மெய் அறிந்து போனதால்
யானே சிவனானேன்!

90. யான் தேடியவற்றில் எல்லாம் நீயே இருந்தாய்
யான் தேடியது பெரிது என்று தான் நினைக்க
பெரிதொன்றும்இ சிறிதொன்றுமாய் நின்றது என்னுள்ளே
பேசினேன் பேசியது
நேசித்தேன் நேசித்தது
கலக்க நினைத்தேன் கலந்தது
கலந்ததிலும் காதல் இருந்தது
காதலில் இன்பம் இருந்தது
இன்பமே பேரின்பமாக இருந்தது
ஆம் பேர் இன்பத்தின் பரமானந்தம்
என் உணர்வில் பரமானந்தமானது
யான் பரமாத்துவமானேன்
யானே பரமாத்துவமாகிப் போனதால்
யானே சிவனானேன்!

91. புலன்கள் எண்ணில்
புலம்பாமல் இருக்க
சிவகீதம் மீட்டச் செய்தேன்
புலன்களும் எனக்கு புல்லாங்குழல் ஆகியது.
என் சிவ நாதனும் வந்தான் என்னில் நாதமாக
சிவனாதனே என் நாடி நரம்புகளில் பரவியே நின்றான்
நர்த்தனம் பயின்றவன்
பரவியே என்னில் நின்றான்
இதுவல்லவோ பரமானந்தம்v பரமானந்தத்தை ஒன்று
திரட்டியே உச்சியில்
நிறுத்தி சுவைத்தேன்
ஏகானந்தமாகியது அது
அது என்னுள் ஏகமானதால்
யானே சிவனானேன்!
92. பிரேமை கொண்டேன் அவனிடத்தே
அவனியில் அவனே தலைவன்
இதழ் பிரிந்து பிரித்து அழைத்தான்
அம்மா என்று
என் ஆருயிர் வென்றது சதமாக
என்னுள் பிறந்ததே சிவமாக
யானே சிவனானேன்!

93. பேச்சையும் நிறுத்தி
மூச்சையே தூது விட்டேன்
முகுளத்தில் முதல்வியாக
முகுண்டு முனைந்து நின்றேன்.
முக்கூடல் கதவுதான் திறக்க
முக்கண்ணன் வந்தான் எக்காலத்திலும் என்னோடு இருக்க
முப்பதத்தில் கலந்து இணைந்தோம்.
மூட்டிய பேர் ஆனந்தம் பரவியிருக்க கூடிக்கழித்தேன்
யானே சிவனானேன்!

94. எண் கோன் அரசன்
எண்ணத்திலேயே எண்ணியப்படி இருக்க
என்னிலும் எண்ணத்திலும்
எழுந்தே நின்றான்
என்னில் மலர்ந்து மணத்தான்
எண்ணில்லா இன்பம் தான் என்னிலே
எல்லையில்லாதவன் எல்லாமாய்எ என்னில் இருக்க
யானே சிவனானேன்!

95. என்னை ஈன்ற பிரான்
பிராணனாக வந்தான்
பிராணனே நீ ஆனேன்.
பிராணனை இழுத்து அணைக்க
பிறந்ததே பேர் ஆனந்தம்
பிறவாதவனின் பிறவா அம்நீயாய்
பிணைந்தேன் பிராணநாதனுடன்
பிணைந்து ஒன்றானதால்
யானே சிவனானேன்!

96. முப்புரம் எரித்தவனை
முக்குணம் எரிக்கச் சொன்னேன் எரித்தான் என்னைக்காக்க
நிர்க்குணம் வந்ததே நின்றேன் நட்டநடு நாசி உச்சியில்
திரிபுரம் எரித்தவன்
என்னை தீண்டியதால்
திளைத்தேன் அவன் தன்னிலே
திளைத்து ஒன்றானதால்
யானே சிவனானேன்!


97. சிவநாதத்தில் பிறந்ததோர் சிவவாசனை
சீகையில் ஒளித்தே வைத்தேன்
சிங்காரமாய் சீறியே ஆடி
சின்மயமாய் நின்றான் சிற்றம்பலவாசன்
சிவானந்தம் பிறந்தது சிரசினில்
சிவசிவா என்று சிரசில் இருந்தேன்
சிவனே என்று சிரசினில் இருந்ததால்
யானே சிவனானேன்!

98. காணக்கரியவன் சிவன்
கனவில் வந்தான் கரைந்து நின்றேன்
தியானத்தில் வந்தான்
காயத்தில் நின்றான் திளைத்து நின்றேன்
சிவமையத்தில் மையம் கொள்ள
மலையாய் மஹாதேவன் என்மடியில்
வாரி அரவணைத்து அமுது யான் கொடுக்க
அருந்தியவன் அங்கத்தில் கரைந்தே போனான்.
கரைந்ததனால் யானே சிவனானேன்!

99. உள் ஒன்று புறமொன்று
இல்லாது இருக்க
உள்ளும் புறமும் ஆனவனோடு
நின்றது என்அகம்
மண்ணும் விண்ணும் கடந்தவன் என் அகத்தில்
கள்ளம் இல்லாது வந்து உறைந்தான்
ஆருயிரிலும் உறைந்தவன்
பாலில் நீர் கலந்தாற் போல்
என்னில் கலந்தே போனதால்
யானே சிவனானேன்!

100.கண்டசித்த சிவத்தையும் நாமத்தையும்
காதுகள் கேட்டது.
காது கேட்டதை மூக்குகள் முகர்ந்தது
மூக்கு முகர்ந்ததை வாயே ருசித்தது
வாய் ருசித்த சிவத்தை
மனமே உணர்ந்து ர்த்து உண்டது
சிவநாமம் சிவமானதுஎ
சிவத்தை உண்டு சிவமானதால்எ
யானே சிவனானேன்!

- சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி
தருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி 
உரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை
நிகழ்வுகள்

தியானேஷ்வர் நித்திய கால பூஜை விவரம்


திங்கள் - சத் குரு சிவ தியானேஷ்வர் அம்மா அவர்கள்


செவ்வாய் - திரு மோகன் அவர்கள்


புதன் - திருமதி சுனிதா பாபு அவர்கள்


வியாழன் - திருமதி உமா காமாட்சி நாதன் அவர்கள்


வெள்ளி - திருமதி ரமேஷ் செல்வி அவர்கள்


சனி - திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்


ஞாயிறு - திரு குமரேசன் அவர்கள்


தியானேஷ்வர் அபிஷேக அலங்கார ஆராதனை


கோவில் பராமரிப்பு மேற்பார்வை

1. திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்


2. திரு சிவ சுனில் அவர்கள்


அன்னதானம் சிவஸ்தல வழிபாடுக் குழு நடத்துனர்கள்


1. திரு. ரமேஸ் செல்லையா
(சிசிபில்டர்ஸ்)    Mobile:8754043401


2. திரு. பரத் குமரன் (Magic Bite)   
Mobile: 9789859857


கைலாய வாத்தியக் குழு வழி நடத்துனர்


1. திரு. சிவதாஸ்
    Mobile: 9444813781


go back to the top